ஜோலார்பேட்டை அருகே: கணவனை பிரிந்து காதலனை மணந்த இளம்பெண் - போலீஸ் விசாரணை
ஜோலார்பேட்டை அருகே கணவனை பிரிந்து காதலனை மணந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய பொன்னேரியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் பிளஸ்-1 படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைமீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மைனர் பெண் என்பதால் ஊர் பஞ்சாயத்து கூடி இருவரையும் பிரித்து வைத்தனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் சாலை நகரை சேர்ந்த உறவினரான சக்திவேலுக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. அப்போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்களுக்கும், பெண் வீட்டை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் சமரசம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆடி மாதம் பிறந்ததால் இளம்பெண் தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு வந்ததும் மீண்டும் கார்த்திக்கை இளம்பெண் சந்தித்து பேசி உள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. ஆடி மாதம் முடிந்தவுடன் சக்திவேல் மனைவியை அழைத்து செல்ல மாமியார் வீட்டுக்கு வந்தார். அவருடன் செல்ல இளம்பெண் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுர்ணமியை முன்னிட்டு சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அப்போது அவரது மனைவி கார்த்திக்குடன் கழுத்தில் புதிய தாலியுடன் ஜோடியாக கிரிவலம் செல்வதை கண்டு திடுக்கிட்டார்.
அவர்களை பின்தொடர்ந்து சென்றபோது அவர்கள் புதுமண தம்பதிகள் போல் நடந்து கொண்டனர்.
இதையடுத்து சக்திவேல் தனது மனைவி தன்னை ஏமாற்றி வேறொரு வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டதாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story