சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா: புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்புடன் உள்ளனர் நாராயணசாமி பெருமிதம்


சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா: புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்புடன் உள்ளனர் நாராயணசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:30 PM GMT (Updated: 11 Oct 2018 10:25 PM GMT)

புதுச்சேரியில் பெண்கள் உரிய பாதுகாப்புடன் உள்ளனர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான பெண் குழந்தையை காப்போம் என்ற திட்டத்தின்கீழ் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா சித்தன்குடி ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

சமூக நலத்துறை செயலாளர் அலைஸ்வாஸ் வரவேற்று பேசினார். விழாவில் பெண் குழந்தைகளை பெருமைப்படுத்தும் வகையில் குழந்தை உரிமைகளும், மனித உரிமைகளே என்னும் தலைப்பிலான லோகோவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:- புதுவை மாநிலத்தில் கவர்னர், காவல்துறை தலைவர், அரசு செயலாளர் என உயர் பதவிகளில் பெண்கள் உள்ளனர். ஆனால் இந்த நிலை வடநாட்டில் இல்லை. அங்கு பெண்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை.

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலையில் துணியை போட்டுக்கொண்டு பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள். புதுவை வாக்காளர் பட்டியலை பார்த்தால் 1000 ஆண்களுக்கு ஆயிரத்து 50 பெண்கள் உள்ளனர். புதுவை மாநிலத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளது. உரிமைகளும் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு அதிகாரம் வழங்கவே ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சட்டத்தை கொண்டுவந்தார். அதன்படி உள்ளாட்சி பதவிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மக்களைவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேலவையில் எதிர்ப்பு கிளம்பியது. அதை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம்.

பெண்கள் நன்கு படிக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் முதலிடம் பெறுபவர்கள் பெண்களாக உள்ளனர். பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளைப்போல் பெண் பிள்ளைகளையும் கவனிக்கவேண்டும். கடைசி காலத்தில் பெற்றோரை காப்பவர்கள் பெண் குழந்தைகள்தான். பல குடும்பங்களில் ஆண்கள் திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் சென்றுவிடுகின்றனர். ஆணும், பெண்ணும் சமநிலை என்ற நிலை உருவாகவேண்டும். கற்பழிப்பு போன்ற கொடுமைகளுக்கு முடிவுகட்ட மரணதண்டனை சட்டம் கொண்டுவந்துள்ளனர். சமூகம் குறித்த விழிப்புணர்வு பெற்றோருக்கு இருக்கவேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம் பேசியதாவது:- புதுவை அரசின் எண்ணமே பெண்களை காப்பதுதான். எந்த குழந்தையாக இருந்தாலும் பெற்றோருக்கு சம அளவில்தான் சுமை உள்ளது. பெண் குழந்தைகள் பெற்றோரிடம் பாசமாக இருக்கும். ஆண்களைவிட பெண்களே குடும்பத்துக்காக உழைத்து காப்பாற்றி வருகிறார்கள். பல குடும்பங்களில் ஆண்களின் வருமானம் மதுகடைக்குத்தான் செல்கிறது.

ஒரு காலத்தில் பெண்களுக்கு திருமணம் என்பது மிக சுமையாக இருக்கும். ஆனால் இப்போது பெண்கள் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறார்கள். அவர்கள் குடும்பத்துக்கு சுமையாக அல்லாமல் சுகமாக இருக்கிறார்கள். இதுதான் வளர்ச்சி. இப்போது பெண்களை பார்த்து ஆண்கள் ஓடும் நிலை உள்ளது.

கடந்த முறை சட்டமன்றத்தில் ஒரு பெண் எம்.எல்.ஏ.கூட கிடையாது. ஆனால் இப்போது 4 பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இவர்கள் 4 பேரும் ஆண்களை தோற்கடித்து வந்தவர்கள்தான். இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கீதா ஆனந்தன், விஜயவேணி, அரசு செயலாளர்கள் பத்மா ஜெய்ஸ்வால், ஜூலியட் புஷ்பா, மதர்தெரசா சுகாதார அறிவியல் நிலைய புல முதல்வர் ஜெயந்தி, புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் சிவசத்யா, கெமின் இன்டஸ்ட்ரீஸ் மேலாண் இயக்குனர் ராதிகா, பளுதூக்கும் வீராங்கனை ஆஷிகா ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story