தப்பி ஓடிய கைதியின் புகைப்படத்துடன் நோட்டீசு அச்சடித்து தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை


தப்பி ஓடிய கைதியின் புகைப்படத்துடன் நோட்டீசு அச்சடித்து தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 12 Oct 2018 11:30 PM GMT (Updated: 12 Oct 2018 6:55 PM GMT)

கோவையில் தப்பி ஓடிய கைதியின் புகைப்படத்துடன் நோட்டீசு அச்சடித்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புள்ளப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் என்கிற செல்வராஜ் (வயது 34). இவர், கடந்த 2015–ம் ஆண்டில் கோவை தச்சன் நகரை சேர்ந்த சந்தியா என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கில் கைதான செல்வராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

செல்வராஜின் மனைவிக்கும், மற்றொருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக, சிறையில் இருந்த அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் சிறையில் இருந்து தப்பிச்செல்ல திட்டம் தீட்டி, கொசுவர்த்தி சுருளை தின்றும், மணிக்கட்டை அறுத்தும் செல்வராஜ் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் கடந்த 8–ந் தேதி காலையில் கழிவறைக்கு சென்ற அவர், அங்குள்ள ஜன்னல் வழியாக தப்பினார்.

இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தப்பி ஓடிய கைதி செல்வராஜை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு தனிப்படை செல்வராஜின் சொந்த ஊரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையாகி வெளியே சென்றவர்களின் பட்டியலை தேர்வு செய்து, அவர்கள் வீடுகளில் செல்வராஜ் பதுங்கி இருக்கிறாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர அவர் கேரள மாநிலத்துக்கு தப்பிச்செல்ல வாய்ப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று, அங்கும் முகாமிட்டுள்ளனர்.

இது குறித்து தனிப்படையை சேர்ந்த போலீசார் கூறியதாவது:–

தப்பிச்சென்ற கைதி செல்வராஜ், ஒருமுறை மட்டுமே செல்போனை பயன்படுத்தி உள்ளார். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அது சுவிட்ச்–ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. அதுவும் அவர் கோவையில் இருந்துதான் பேசி உள்ளார். அதன் பின்னர் அவர் அந்த செல்போனை பயன்படுத்தவில்லை. தப்பிச்செல்லும்போது தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்பதற்காகதான் அவர் மொட்டையும் அடித்துள்ளார்.

அவரின் முக்கிய திட்டம், மனைவியை கொலை செய்வதுதான். அந்த கோபம்தான் அவரிடம் இருக்கிறது. அவரை பிடிக்காமல் விட்டு விட்டால் ஒரு உயிர் பறிபோய்விடும். எனவே அவரை விரைவாக பிடிக்கும் வகையில் அவருடைய பழைய புகைப்படம் மற்றும் மொட்டை அடித்த பின்னர் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியவற்றுடன் அவருடைய விவரம் அடங்கிய நோட்டீசு அச்சடிக்கப்பட்டு உள்ளது.

அந்த நோட்டீசுகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் மாநில ஆவண காப்பகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர அனைத்து பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்வராஜ் குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீசும் ஒட்டப்பட்டு வருகிறது.அவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் போலீசில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story