புதுக்கடை அருகே பரபரப்பு : பாலியல் தொல்லையால் பட்டதாரி பெண் தீக்குளிப்பு அண்ணன் மீது வழக்குப்பதிவு


புதுக்கடை அருகே பரபரப்பு : பாலியல் தொல்லையால் பட்டதாரி பெண் தீக்குளிப்பு அண்ணன் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 13 Oct 2018 3:30 AM IST (Updated: 13 Oct 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே பாலியல் தொல்லையால் பட்டதாரி பெண் தீக்குளித்தார். இதுதொடர்பாக அவருடைய அண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுக்கடை, 


புதுக்கடை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). இவருடைய பக்கத்து வீட்டில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜேஷ் அந்த இளம்பெண்ணுக்கு உறவுமுறையில் அண்ணன் ஆவார்.

நேற்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்து டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது, டி.வி. பழுதானதாக தெரிகிறது. இதையடுத்து பக்கத்து வீட்டில் இருந்த ராஜேஷை அழைத்து டி.வி.யை சரி செய்து தருமாறு கூறினார். அவர் அண்ணன் முறை என்பதால் துணிச்சலுடன் வீட்டுக்குள் அனுமதித்தார்.

வீட்டின் உள்ளே சென்ற ராஜேஷ், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த பட்டதாரி பெண் சமையல் அறையில் சென்று தன்மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே, ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை தேடி வருகிறார்கள்.

Next Story