தமிழகத்திலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-கோர்ட்டு வசதி பயிற்சி முகாமில் அமைச்சர் பேச்சு


தமிழகத்திலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-கோர்ட்டு வசதி பயிற்சி முகாமில் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 12 Oct 2018 10:42 PM GMT (Updated: 12 Oct 2018 10:42 PM GMT)

தமிழகத்திலேயே முதல் முறையாக இ-கோர்ட்டு வசதி திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது என்று பயிற்சி முகாமில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 475 இ-சேவை மைங்களில் இ-கோர்ட்டு இணைப்பு வசதி மற்றும் இ-சேவை மையங்களின் பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். கூடுதல் மாவட்ட நீதிபதி (ஆரணி) தேவநாதன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர், மகளிர் நீதிமன்ற நீதிபதி நடராஜன், முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீராம், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக அரசு, சட்டத்துறை மூலமாக எண்ணற்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. சட்டம் மனித சமுதாயத்தின் மாண்பை பேணிக் காப்பதாலும், மக்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியதாக சட்டங்கள் விளங்குவதாலும் தமிழக அரசு சட்டத்துறைக்கு மிகுந்த முக்கியத்தும் அளித்து வருகிறது.

இந்தியாவில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து இ-கோர்ட்டு ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கின் நிலை, நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் உள்பட அனைத்து விவரங்களும் ஆன்லைன் வாயிலாக தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வழக்கு விவரங்கள் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வரும் நிலையினை மாற்றுவதற்காக இ-கோர்ட்டு செயல்பாடுகள் இ-சேவை மையங்களில் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 475 பொது இ-சேவை மையங்களில் இந்த சேவையை பெறலாம். தமிழகத்திலேயே இ-சேவை மையங்களில் முதல் முறையாக இ-கோர்ட்டு வசதி திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கலெக்டர் கே.எஸ். கந்தசாமி பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் இ-கோர்ட்டு செயல்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய கிராமங்களில் வாழும் மக்கள் வழக்கு குறித்த விவரங்கள் பெறுவதற்கு தொலை தூர பயணம் மேற்கொண்டு நீதிமன்றங்களுக்கு செல்லும் நிலை இனி வரும் காலங்களில் முற்றிலும் தவிர்க்கப்படும். இ-சேவை மையங்கள் மூலம் சான்றுகள் வழங்குவதில் மாநில அளவில் 14-வது இடத்திலிருந்து, திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த இ-சேவை மையத்தின் மூலம் நமது மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர். இ-சேவை மையங்களில் இ-கோர்ட்டு மூலம் விவரங்கள் கேட்க வருபவர்களுக்கு இலவச சேவை செய்ய வேண்டும். எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது’ என்றார்.

முகாமில் நீதிபதிகள், அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் இ- சேவை மைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story