மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்ட டீக்கடைக்காரருக்கு வெட்டு; 3 பேர் கைது + "||" + Repayment of debt Cut the tea shopkeeper 3 people arrested

கடனை திருப்பி கேட்ட டீக்கடைக்காரருக்கு வெட்டு; 3 பேர் கைது

கடனை திருப்பி கேட்ட டீக்கடைக்காரருக்கு வெட்டு; 3 பேர் கைது
காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் கடனை திருப்பிக் கேட்ட டீக்கடைக்காரரை ஒரு கும்பல் கத்தியால் வெட்டியது. தடுக்க வந்த மனைவியை இரும்பு கம்பியால் தாக்கினர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேலு. இவர் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே டீக்கடை வைத்துள்ளார். இந்த டீக்கடையில் சிறுகாவேரிப்பாக்கம் சர்ச் தெருவை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 48)அடிக்கடி வந்து டீ குடிப்பார். அவருக்கு அந்த கடையில் ரூ.500 கடன் இருப்பதாக கூறப்படுகிறது.


இதையொட்டி டீக்கடை உரிமையாளர் வேலு, சார்லசிடம் கடனை தருமாறு கேட்டார். அதற்கு சார்லஸ் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள 3 பேரை சிறுகாவேரிப்பாக்கம் டீக்கடைக்கு அழைத்து வந்து அந்த டீக்கடையை அடித்து நொறுக்கினர்.

பிறகு டீக்கடை உரிமையாளர் வேலுவை கத்தியால் வெட்டினர். இதையடுத்து அவரது மனைவி காஞ்சனா தடுக்க வந்தார். அவரையும் அந்த கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வேலுவை எட்டி உதைத்தும், கையால் தாக்கியும், கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காஞ்சீபுரம் பாலுச்செட்டிசத்திரம் போலீசில் வேலுவின் மகன் சேகர் புகார் செய்தார்.

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர் உடனடியாக போலீசாருடன் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

சிறுகாவேரிப்பாக்கம் ரோட்டில் அந்த கும்பல் நடந்து சென்றது தெரிந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் பிரபாகர் அந்த கும்பலை பிடித்து கைது செய்தார். விசாரணையில், சார்லஸ் (48), அரக்கோணம் கீழாந்துறை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (44), அரக்கோணம் புலியாமங்களம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி, கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சார்லஸ் மகன் இம்மானுவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த வேலு, அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.