கீழடி அகழ்வாராய்ச்சியில் 14 ஆயிரம் பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்


கீழடி அகழ்வாராய்ச்சியில் 14 ஆயிரம் பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2018 11:00 PM GMT (Updated: 13 Oct 2018 6:35 PM GMT)

‘‘கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 14 ஆயிரம் பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன’’ என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் அகழாய்வு நடத்தப்பட்டு, ஏராளமான பழங்கால பொருட்கள் எடுக்கப்பட்டன. அமைச்சர் பாண்டியராஜன் நேற்று கீழடி வந்து அகழாய்வு நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கீழடியில் மத்திய அரசு 3 கட்ட அகழாய்வுகளை செய்தது. 4–ம் கட்ட அகழாய்வு தமிழக அரசு மூலம் நடத்தப்பட்டது. இதற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தமாக சுமார் 14 ஆயிரம் பழங்கால பொருட்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன.

இந்த பொருட்களை கொண்டு கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்படும். இதற்கு தமிழக அரசு 2 ஏக்கர் நிலமும், கட்டிடம் கட்ட ரூ.1 கோடியும் ஒதுக்கி உள்ளது. தமிழக அரசு மூலம் நடத்தப்பட்ட 4–ம் கட்ட அகழாய்வில் தங்கத்தில் ஆன 6 பொருட்கள் கிடைத்துள்ளன.

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நேர்த்தியான செங்கல் கட்டுமானம் மற்றும் தரைத்தளம், ஏராளமான உறைகிணறுகள் கண்டறியப்பட்டு உள்ளன. மேலும் குறியீடுகள் கொண்ட பொருட்கள், மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சிறியது முதல் பெரியது வரையிலான நுண்வகை மண்கலன்கள், சங்கு வளையல்கள், செப்புக்காசுகள் கிடைத்துள்ளன. இவை பழந்தமிழர்களின் வாழ்வியலையும், பண்பாடுகளையும் உணர்த்தும் சான்றுகளாய் உள்ளன.

கீழடியில் தான் 4–ம் கட்ட அகழாய்வு முடிந்து, 5–ம் கட்ட அகழாய்வு தொடங்கும் நிலை உள்ளது. பழந்தமிழர்களின் நாகரிகங்கள், பெருமைகளை தமிழக அரசு கண்டிப்பாக வெளிக்கொணரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story