திருச்சி ரெயில் நிலையம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் ஆம்னி பஸ் நிலையம் ஆயுதபூஜைக்கு திறப்பு


திருச்சி ரெயில் நிலையம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் ஆம்னி பஸ் நிலையம் ஆயுதபூஜைக்கு திறப்பு
x
தினத்தந்தி 13 Oct 2018 11:00 PM GMT (Updated: 13 Oct 2018 6:36 PM GMT)

திருச்சி ரெயில்நிலையம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் ஆம்னி பஸ் நிலையம் அமைகிறது. ஆயுதபூஜை அன்று திறக்கப்படுகிறது.

திருச்சி,

தமிழ்நாட்டின் மையப்பகுதியாக விளங்குவது திருச்சி மாநகரம். இதனால் திருச்சி மத்திய பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும். இங்கிருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அரசு மற்றும் அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் சொகுசு பயணத்தை விரும்பும் பெரும்பாலான பயணிகள் ஆம்னி பஸ்களையே நாடிச்செல்கின்றனர். நீண்ட தூர பயணத்துக்கு ஆம்னி பஸ்களையே பயணிகள் விரும்புகிறார்கள். பயண கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் சொகுசாகவும், அதிவிரைவாக பயணம் செய்து குறித்த நேரத்தில் ஊர்களை சென்றடைய முடிகிறது. திருச்சியில் ஆம்னி பஸ்களுக்கென்று தனியாக இடம் ஏதும் இல்லாததால், அந்த பஸ்கள் மத்திய பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள சாலைகளில் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால், பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் பண்டிகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாகவும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படி இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு நிரந்தரமாக பஸ் நிலையமோ அல்லது பஸ்கள் நிறுத்தும் இடமோ இல்லை என்ற குறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

எனவே, திருச்சி மாநகரில் ஆம்னி பஸ்களுக்கென்று நிரந்தரமாக ஒரு இடம் அவசியம் என்பதால், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்டோரை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஆம்னி பஸ்களுக்கான இடத்தை ஒதுக்கித்தர தென்னக ரெயில்வே நிர்வாகம் முன்வந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கும், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில், ரெயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் பராமரிப்பின்றி கிடந்தது. அந்த இடத்தை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் நிர்வகிக்க தென்னக ரெயில்வே அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து அந்த 2 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை தனியார் ஆம்னி பஸ் நிலையமாக மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. பராமரிப்பின்றி முட்புதர்கள் வளர்ந்த இடத்தில் அவை வெட்டி அகற்றப்பட்டன. மேலும் நிலமும் சீரமைக்கப்பட்டது. அங்கு 200 பஸ்களை நிறுத்தி வைக்கக்கூடிய அளவில் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 32 கடைகளும் இடம்பெறுகின்றன.

வருகிற 18-ந் தேதி ஆயுத பூஜை அன்று ஆம்னி பஸ் நிலையம் திறக்கப்படுகிறது. அன்று முதல் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களுக்கும் மற்றும் வெளியூர்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும், திருச்சி ஆம்னி பஸ் நிலையம் வழியாகவே செல்லும்.

இதுகுறித்து மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாலசுப்பிர மணியன் கூறியதாவது:-

திருச்சியில் தென்னக ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் நிரந்தரமாக ஆம்னி பஸ் நிலையம் அமைவது மகிழ்ச்சிக்குரியது. இதனை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர். இதனால், பயணிகளின் அலைச்சல் குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அருகிலேயே அரசு பஸ் நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம் இருப்பது சிறப்பு. வருகிற ஆயுத பூஜை முதல் ஆம்னி பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story