புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 Oct 2018 3:15 AM IST (Updated: 14 Oct 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பேரை, 

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்தலோசனர் பெருமாள் கோவில், தேவர்பிரான் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகியவற்றில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, நேற்று காலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

கோவில்களில் மூலவரின் முன்பாக உற்சவர் தாயார்களுடன் எழுந்தருளினர். காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் கோவில் வளாகங்களில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அகத்திக்கீரை, நெல்லிக்கனி போன்றவற்றை வாங்கி சென்றனர்.

சாமி தரிசனம்

மகா புஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி நதியில் புனித நீராடிய பக்தர்கள், நவ திருப்பதி கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு ஒரே பஸ்சில் சென்று திரும்பும் வகையில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விசுவநாத் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.இதேபோன்று குரும்பூர் அருகே புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில் கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காலை முதல் மாலை வரையிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் கைங்கர்யதாரர் ராஜகோபால் ஆலோசனையின்பேரில், கோவில் மேலாளர் வசந்தன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

எட்டயபுரம் வெங்கடாசலபதி கோவிலில் காலை, மதியம், இரவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கருடசேவை

குரும்பூர் தசம திருப்பதி ஆதிநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கருடசேவை நடந்தது. ஆதிநாராயண பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி தாயார்களுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் கைங்கர்ய சபா தலைவர் கிஷோக் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்து இருந்தனர்.

Next Story