பெருந்துறை அருகே கார்–சரக்கு லாரி மோதல்; முதியவர் சாவு


பெருந்துறை அருகே கார்–சரக்கு லாரி மோதல்; முதியவர் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2018 10:00 PM GMT (Updated: 13 Oct 2018 8:07 PM GMT)

பெருந்துறை அருகே வளைகாப்புக்காக மகளை அழைத்து சென்ற முதியவர், காரும் சரக்கு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

பெருந்துறை,

சென்னை கொளப்பாக்கம் நாராயணன் நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 75). அவருடைய மனைவி ராதா(60). இவர்களுடைய மகன் தேவராஜ் (40), மகள் தீபா (36). இவருக்கும் கேரளாவை சேர்ந்த பதி கே.நாயக்கருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தீபா கர்ப்பமாக இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபா சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவரை கேரளாவுக்கு நேற்று காரில் அழைத்து சென்று கொண்டிருந்தார்கள். காரை தேவராஜ் ஓட்டினார். அவருக்கு அருகில் தாமோதரன் உட்கார்ந்திருந்தார். பின் இருக்கையில் ராதாவும், தீபாவும் அமர்ந்திருந்தார்கள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிக்கோவில் பிரிவு அருகே காலை 6.30 மணி அளவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் கார் முழுவதும் சேதம் அடைந்தது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி தாமோதரன், ராதா ஆகியோர் படுகாயம் அடைந்தார்கள். மற்ற 2 பேரும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்கள்.

உடனே தேவராஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். எனினும் சிகிச்சை பலனின்றி தாமோதரன் பரிதாபமாக இறந்தார். ராதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story