தனியார் நிதி உதவியுடன் வாய்க்கால்கள் தூர்வார திட்டம் - கவர்னர் கிரண்பெடி தகவல்


தனியார் நிதி உதவியுடன் வாய்க்கால்கள் தூர்வார திட்டம் - கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:30 AM IST (Updated: 14 Oct 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனங்களின் நிதி உதவியுடன் ரூ.1 கோடி செலவில் வாய்க்கால்களை தூர்வார திட்டமிட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.

வில்லியனூர்,

புதுவை மாநிலத்தின் நீர் நிலைகளை தூர்வாரி நிலத்தடி நீரை மேம்படுத்த கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு அரசிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில் தனியார் நிறுவனங்களின் உதவியை கவர்னர் நாடினார். அதன்பேரில் பாகூர் மற்றும் திருபுவனை வாய்க்கால்கள் தனியார் பங்களிப்புடன் தூர்வாரப்படுகிறது.

இந்த நிலையில் வில்லியனூர் அருகே உள்ள குடுவையாறு வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அந்த வாய்க்காலை தனியார் பங்களிப்புடன் ரூ.6 லட்சத்து 71 ஆயிரம் செலவில் தூர்வார கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுத்தார்.

11 கிலோ மீட்டர் நீளமுள்ள குடுவையாறு வாய்க்கால் புதுவை மாநிலம் கீழுரில் தொடங்கி அபிஷேகப்பாக்கத்தில் சங்கராபரணி ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் மூலம் 13 கிராமங்களில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி உறுவையாறில் நேற்று நடைபெற்றது.

கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகுமாறன் எம்.எல்.ஏ., வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து பாகூர் ஏரிக்கரையை கவர்னர் பார்வையிட்டார். அங்கு வனத்துறை மற்றும் பாரத் கிரீன் பவுண்டேசன் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கவர்னர் கலந்துகொண்டு, ஏரிக்கரையில் பனை விதைகளை புதைத்தார். அப்போது அவர், பாகூர் ஏரியை வருகிற கோடை காலத்தில் தூர்வார வேண்டும், ஏரியை தூர்வாரும்போது கிடைக்கும் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.

ஏரி, பாசன வாய்க்கால்களை தூர்வார தனியார் நிறுவனங்களிடம் ஒரு கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டது. இதுவரை ரூ.80 லட்சம் நிதி வந்துள்ளது. மீதமுள்ள ரூ.20 லட்சம் விரைவில் திரட்டப்படும். இந்த நிதி முழுக்க முழுக்க வாய்க்கால்களை தூர்வார பயன்படுத்தப்படும் என்றார்.

Next Story