சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்பப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருங்கிணைந்து எல்லாத்துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வரும் தகவல்களை பயோ மெட்ரிக் முறையில் பெற்றோருக்கு தெரியப்படுத்தும் வசதி இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் போரூரில் தொடங்கப்பட்டு உள்ளது.
15 நாட்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அதிக மாணவிகள் படிக்கும் அரசு பள்ளிக்கூடங்களில் முதலில் தொடங்கப்படும். அதன்பின்னர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் தனியார் நிதி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாணவர்களுக்கு காலணிக்கு பதில் ‘ஷூ’ வழங்க வேண்டும் என முதல்–அமைச்சரிடம் மனு அளித்துள்ளேன். ஒப்புதல் பெற்றவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும். வருகிற ஆண்டில் 1 முதல் 8–ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கூடங்களை மிஞ்சுகின்ற வகையில் மாற்றம் செய்யப்பட்ட சீருடைகள் வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு தலா 4 சீருடைகளை அரசே வழங்க உள்ளது.
வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிக்கூடங்களில் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு மத்திய அரசின் ஒப்புதலுடன் ஆயிரம் பள்ளிக்கூடங்களில் அறிவியல் ஆய்வகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலியாக உள்ள சிறப்பாசிரியர் பணியிடங்கள் ஓரிரு மாதங்களுக்குள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
நீட் தேர்வு மையத்தில் கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 19 மாணவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. கால அவகாசம் குறைவாக இருந்த காரணத்தினால் முழு பயிற்சி பெறுவதற்கு மாணவர்களால் முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் இந்த ஆண்டு முதற்கட்டமாக நீட் தேர்வுக்கு 6 மாத காலங்கள் முழு பயிற்சி அளிக்க அரசு முன்வந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் இருந்து ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் நிலையை இந்த ஆண்டு தமிழக அரசு உருவாக்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.