திருவண்ணாமலை அருகே: வரி செலுத்தாத கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தம் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல்


திருவண்ணாமலை அருகே: வரி செலுத்தாத கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தம் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Oct 2018 3:30 AM IST (Updated: 15 Oct 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

வரி செலுத்தாத கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்டராம்பட்டு,


திருவண்ணாமலை நகராட்சிக்கு சாத்தனூர் அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சாத்தனூர் அணையிலிருந்து கொளமஞ்சனூர், கீழ்ராவந்தவாடி, தண்டராம்பட்டு, ராதாபுரம், கீழ்சிறுபாக்கம், நல்லவன்பாளையம், கீழ்செட்டிப்பட்டு கிராமங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு திருவண்ணாமலைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீர் மேற்கண்ட கிராமங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை நகராட்சிக்கு கூட்டு குடிநீர் பெறும் கிராம ஊராட்சிகள் குடிநீர் வரி செலுத்த வேண்டும். ஆனால் மேற்கண்ட ஊராட்சிகள் வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இதில் கொளமஞ்சனூர், ராதாபுரம், தண்டராம்பட்டு, கீழ்சிறுபாக்கம் பஞ்சாயத்தில் 2 ஆண்டு வரி பாக்கி இருப்பதாக தெரிகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் வரி செலுத்தாத கிராமங்களுக்கு கடந்த 11 நாட்களாக குடிநீர் வினியோகத்தை முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்த போது நல்லவன்பாளையம் என்ற இடத்தில் குழாய் உடைந்ததால் குடிநீர் சப்ளை வரவில்லை என சாக்கு போக்கு சொல்லி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ராதாபுரம் பஸ் நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ், லாரியை தடுத்து நிறுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி அங்கு வந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, பொதுமக்களிடம் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story