திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு ; கொசுப்புழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு ; கொசுப்புழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2018 9:45 PM GMT (Updated: 16 Oct 2018 5:42 PM GMT)

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கொசுப்புழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முருகபவனம்,

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சுத்தம், சுகாதாரம் பேணி காக்கப்படுகிறதா? நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் டி.ஜி.வினய் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தி சில அறிவுரைகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து நேற்று ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர், மருத்துவமனையில் உள்ள தேவையற்ற, பழைய விளம்பர பலகைகளை அகற்றவும், சிகிச்சை பிரிவுகளுக்கு பின்புறம் உள்ள முட்புதர்கள், குப்பைகளை அகற்றவும் உத்தரவிட்டார். அதன்பிறகு மருத்துவமனையின் பொது சாக்கடை கால்வாய்கள் எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் அதனை பார்வையிட்டார். அப்போது மலேரியா காய்ச்சலை உண்டாக்கும் ஒரு வகை கொசுக்கள் இருப்பதை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

அதன்பிறகு மருத்துவமனையில் உள்ள நீர்தேக்க தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். அப்போது டெங்கு கொசுப்புழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதேபோல் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் உடனிருப்போர் வெளியிலிருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த அறிவுறுத்தினார்.

மருத்துவமனையின் நுழைவுவாயில் அருகே உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை மருத்துவமனை நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு முறையான இடம் ஒதுக்க வேண்டும், கண்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டார். அதன்பிறகு சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று நோயாளிகளிடம், முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கிறதா? என்பதை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி, நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story