லாரி மீது மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது: நெல்லை டிரைவர் உள்பட 4 பேர் உடல் கருகி பலி - 12 பேருக்கு தீவிர சிகிச்சை


லாரி மீது மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது: நெல்லை டிரைவர் உள்பட 4 பேர் உடல் கருகி பலி - 12 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 19 Oct 2018 9:45 PM GMT (Updated: 19 Oct 2018 7:14 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது மோதி ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உளுந்தூர்பேட்டை, 

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பொன்னழகு மகன் அலெக் சாண்டர் (வயது 59) என்பவர் ஓட்டினார்.

நள்ளிரவு 1.30 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சுக்கு முன்னால் அரியலூரில் இருந்து சிமெண்டு கலவை ஏற்றிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது.

அஜீஸ் நகர் என்ற இடத்தில் சென்ற போது அங்குள்ள ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார். அப்போது பின்னால் அலெக்சாண்டர் ஓட்டி வந்த ஆம்னி பஸ் கண் இமைக்கும் நேரத்தில் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. பஸ் மோதிய வேகத்தில் லாரியில் இருந்த டீசல் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் லாரியும் ஆம்னி பஸ்சும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். அப்போது பஸ் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் பயணிகளால் வாசல் வழியாக வெளியேற முடியவில்லை.

இதற்கிடையே பஸ் மற்றும் லாரியின் டயர்களும் வெடித்தது. இதனால் பதறிய பயணிகள் பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டும், அவசர கதவை திறந்து கொண்டும் வெளியேறி உயிர் தப்பினர். இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், மங்கலம்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ் மற்றும் லாரி மீது எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

அப்போது பஸ் டிரைவர் அலெக்சாண்டர், மதுரையை சேர்ந்த கிளனர் சக்திவேல்(58), பஸ்சில் பயணம் செய்த அருப்புக்கோட்டையை சேர்ந்த சந்திரன் மகள் மோனிஷா(25) ஆகியோர் பஸ்சுக்குள்ளும், லாரி டிரைவர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்த முருகன்(55) லாரியிலும் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Next Story