10-வது நாள் மகா புஷ்கர விழா: தாமிரபரணியில் புனித நீராடிய வெளிமாநில பக்தர்கள்- நெல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் 10-வது நாளான நேற்று வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் புனித நீராடினர். இதையொட்டி நெல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் ஆயிரக்கணக்கில் வந்து புனித நீராடி செல்கின்றனர். நேற்று 10-வது நாள் மகா புஷ்கர விழாவில் வெளிமாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
இதையொட்டி நெல்லை குறுக்குத்துறையில் நேற்று காலை 6 மணி முதல் ஹோம பூஜைகள், பஜனை, கோ-பூஜை ஆகியவை நடைபெற்றன. காலை 10 மணிக்கு தீர்த்தவாரி, மதியம் 12 மணிக்கு விஜயகணேஷ்-மாலி குழுவினரின் வயலின், மிருதங்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலையில் தாமிரபரணி ஆற்றுக்கு மங்கள ஆரத்தியும், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப தீர்த்த கட்டத்தில் நேற்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், அதை தொடர்ந்து புனித நீராடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் பல்வேறு பூஜைகள், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அங்கு பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க வசதியாக மேலும் 3 இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இதேபோல் வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, சிந்துபூந்துறை சிப்தபுஷ்ப தீர்த்த கட்டம் உள்பட தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்ட படித்துறை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் ஆற்றில் விட்டுச்சென்ற மாலைகள், மலர், காகிதம் ஆகியவற்றை துப்புரவு பணியாளர்கள் அவ்வப்போது சுத்தம் செய்தனர்.
தசரா விழாவையொட்டி தொடர் விடுமுறை என்பதால் நேற்று ஆந்திரா உள்பட வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் கைலாசபுரம் தைப்பூச மண்டப தீர்த்தகட்டம் உள்ளிட்ட பகுதிகளில் புனித நீராடினர். ஆற்றில் மலர் தூவியும், விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். நெல்லை மாநகர பகுதி படித்துறைகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் பக்தர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது.
வெளிமாநில பக்தர்கள் பெரும்பாலும் கார், வேன்களில் வந்து குவிந்தனர். மேலும் ரெயில், பஸ்களிலும் நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்தனர். மேலும் தீபாவளிக்கு புத்தாடைகள், தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக நேற்று அந்தந்த கடைகளுக்கு அதிகமானோர் சென்றனர். இதனால் நேற்று ரோட்டில் வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருந்தது. இதையொட்டி நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் பாபநாசம், சேரன்மாதேவி, திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், கோடகநல்லூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி தீர்த்தகட்டங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
Related Tags :
Next Story