கேரள வனத்துறையினரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த மாவோயிஸ்டுகள்


கேரள வனத்துறையினரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த மாவோயிஸ்டுகள்
x
தினத்தந்தி 20 Oct 2018 9:45 PM GMT (Updated: 20 Oct 2018 9:20 PM GMT)

கேரள வனத்துறையினரை துப்பாக்கி முனையில் மாவோயிஸ்டுகள் சிறைபிடித்தனர்.

கூடலூர்,

கேரளாவில் கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்கள் இணையும் பகுதியில் தாமரைச்சேரி உள்ளது. இங்குள்ள மலைப்பாதையில் லெக்கிடி என்ற இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இது சுகந்தகிரி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆதிவாசி மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். மேலும் மாவோயிஸ்டுகளும் பதுங்கி உள்ள பகுதி என்று போலீசாரால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் தாமரைச்சேரி வனச்சரகர் அப்துல் லதீப் தலைமையில் 5 ஊழியர்கள் அந்த வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிறிது தூரம் ஜீப்பில் சென்ற அவர்கள், அடர்ந்த வனப்பகுதி என்பதால் மேற்கொண்டு செல்ல நடக்க வேண்டி இருந்தது. அதன்படி வனப்பகுதியில் ஓடும் ஒரு ஆற்றின் கரையோரம் மதியம் 12 மணியளவில் வனத்துறையினர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதை கண்டனர்.

மேலும் பெண் ஒருவர் ஆற்றங்கரையில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். அவரது அருகில் ராணுவ உடை அணிந்தபடி ஒரு ஆணும் நின்றிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களின் அருகில் சென்றனர். அப்போது உடனே 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து, வனத்துறையினரை சிறைபிடித்தனர். அதன்பிறகு தான் அவர்கள் மாவோயிஸ்டுகள் என்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. பின்னர் வனத்துறையினரிடம் இருந்து ரூ.1,500 மற்றும் பவர் பேங்க், செல்போன் சார்ஜர் போன்றவற்றை அவர்கள் பறித்துக்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் கழித்து ‘போலீசில் புகார் அளிக்கக்கூடாது, மீறினால் தேடி வந்து உங்களை கொலை செய்வோம்‘ என்று மிரட்டிவிட்டு அவர்கள் வனத்துறையினரை விடுவித்தனர். இதையடுத்து வனப்பகுதியில் வேறு வழியாக நீண்ட தூரம் நடந்து மாலை 6 மணியளவில் தாமரைச்சேரிக்கு வனத்துறையினர் வந்து சேர்ந்தனர். பின்னர் தாமரைச்சேரி போலீசில் மாவோயிஸ்டுகள் குறித்து புகார் செய்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த ஆற்றங்கரைக்கு சென்று போலீசார் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. முன்கூட்டியே தப்பி சென்றுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினரிடம் தேடப்படும் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை போலீசார் காண்பித்தனர். அப்போது அவர்களை சிறைபிடித்தது சுந்தரி, மகேஷ் என்ற தாயண்ணா ஆகிய 2 மாவோயிஸ்டுகள் என அடையாளம் தெரிந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வயநாடு, கோழிக்கோடு மாவட்ட எல்லைகள் மற்றும் கூடலூர் பகுதியில் கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 

Next Story