புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன பக்தர்கள் அதிர்ச்சி


புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன பக்தர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 21 Oct 2018 11:15 PM GMT (Updated: 21 Oct 2018 6:47 PM GMT)

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவில் அருகே தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தான் தெப்பத்திருவிழா, முத்துப்பல்லக்கு விழா போன்றவை நடைபெறும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் புனித நீராடுவதும் வழக்கம். கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களும் இந்த குளத்தில் நீராடுவார்கள்.

இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று திடீரென கோவில் தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. இதைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் செத்து மிதப்பதை பார்த்து குளத்தின் புனித தன்மை கெட்டுவிட்டதாக கூறினர். மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில் அதிகாரிகள் செத்து கிடந்த மீன்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி கோவில் தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்புறப்படுத்திய பின்னரும் மீண்டும் மீன்கள் செத்து மிதந்த வண்ணம் இருந்தன.

இரவு நேரங்களில் குளத்தின் படித்துறையில் இயற்கை உபாதை கழிப்பதும், மது பிரியவர்கள் மது அருந்தி பாட்டில்களை குளத்தின் தண்ணீரில் வீசி விட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் கூட குளத்தில் இருந்த மீன்கள் செத்து இருக்கலாம். முறையாக குளத்தை பராமரிப்பு செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளத்தில் உள்ள மீன்களை கொல்ல வேண்டும் என்பதற்காக மர்ம நபர்கள் விஷம் ஏதும் கலந்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story