விருகம்பாக்கத்தில் கஞ்சா விற்ற என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கைது நண்பரும் பிடிபட்டார்


விருகம்பாக்கத்தில் கஞ்சா விற்ற என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கைது நண்பரும் பிடிபட்டார்
x
தினத்தந்தி 23 Oct 2018 11:04 PM GMT (Updated: 23 Oct 2018 11:04 PM GMT)

விருகம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் மற்றும் அவர்களது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் அருகே விருகம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் சோதனை செய்தபோது 300 கிராம் எடை கொண்ட சிறு, சிறு பொட்டலங்களாக 30 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

என்ஜீனியரிங் மாணவர்கள் கைது

இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 19), கிஷோர் (19), பிரேம்குமார் (22) என்பது தெரியவந்தது.

இதில் ஜெயச்சந்திரனும், கிஷோரும் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும், பிரேம்குமார் இவர்களது நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மூவரும் கஞ்சாவை விற்பனை செய்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

3 பேரையும் கைது செய்த விருகம்பாக்கம் போலீசார் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story