காவிரி டெல்டா பகுதியில் முழு கொள்ளளவை எட்டிய 124 ஏரிகள் பருவ மழையை எதிர்நோக்கி காத்து இருக்கும் 696 ஏரி, குளங்கள்


காவிரி டெல்டா பகுதியில் முழு கொள்ளளவை எட்டிய 124 ஏரிகள் பருவ மழையை எதிர்நோக்கி காத்து இருக்கும் 696 ஏரி, குளங்கள்
x
தினத்தந்தி 25 Oct 2018 10:45 PM GMT (Updated: 25 Oct 2018 6:34 PM GMT)

காவிரி டெல்டா பகுதியில் முழு கொள்ளளவை 124 ஏரிகள் எட்டி உள்ளது. இன்னும் 696 ஏரி, குளங்கள் பருவ மழையை எதிர்நோக்கி காத்து உள்ளன.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகள் மூலம் பாசன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கல்லணைக்கால்வாய் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகள் பாசன வசதி பெற்று வருகின்றன.

டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 12½ லட்சம் ஏக்கர் வரை பாசன வசதி செய்யப்பட்டு வந்தன. நாளடைவில் இதன் பாசனப்பரப்பு குறைந்து தற்போது 10½ லட்சம் ஏக்கர் வரை பாசனம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும்.

இதில் டெல்டா பகுதிகளில் மட்டும் வெட்டாறு, அரசலாறு, பாமினியாறு, கோணக் கடுங்கலாறு என 30-க்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் உள்ளன. இது தவிர காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் பகுதிகளில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 529 ஏ பிரிவு வாய்க்கால்களும், 2 ஆயிரத்து 84 பி பிரிவு வாய்க்கால்களும், 1,980 சி பிரிவு வாய்க்கால்களும், 783 டி பிரிவு வாய்க்கால் களும், 182 இ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் 572 ஏ பிரிவு வாய்க்கால்களும், 3 ஆயிரத்து 141 பி பிரிவு வாய்க்கால்களும், 3 ஆயிரத்து 826 சி பிரிவு வாய்க்கால்களும், ஆயிரத்து 957 டி பிரிவு வாய்க்கால்களும், 502 இ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. நாகை மாவட்டத்தில் 599 ஏ பிரிவு வாய்க்கால்களும், 2 ஆயிரத்து 694 பி பிரிவு வாய்க்கால்களும், 3 ஆயிரத்து 542 சி பிரிவு வாய்க்கால்களும், 3 ஆயிரத்து 170 டி பிரிவு வாய்க்கால்களும், 457 இ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஏ பிரிவு வாய்க்கால் களும், 24 பி பிரிவு வாய்க்கால் களும் உள்ளன. இந்த வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் கல்லணைக்கால்வாய் பகுதிகளில் மட்டும் 694 ஏரி, குளங்கள் உள்ளன. வெண்ணாறு பகுதிகளில் 34 ஏரிகளும், காவிரி ஆறு பகுதியில் 4 ஏரிகளும் உள்ளன. இது தவிர பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் உய்யகொண்டான், கட்டளை கால்வாய் பகுதிகளில் ஏரி, குளங்கள் என காவிரி டெல்டா பகுதியில் மொத்தம் 820 ஏரி, குளங்கள் உள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு 22-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது திறந்து விடப்பட்ட தண்ணீரைக்கொண்டு டெல்டா பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் காவிரி, வெண்ணாறு பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி விட்டன. கல்லணைக்கால்வாய் பகுதிகளில் உள்ள சமுத்திரம் ஏரி, கள்ளப்பெரம்பூர் ஏரி, தொண்டமான்ஏரி, அய்யனார் ஏரி உள்பட 86 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி விட்டன. மொத்தம் 124 ஏரிகள் நிரப்பப்பட்டு விட்டன.

மற்ற ஏரி, குளங்கள் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளன. பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் 75 சதவீதம் வரை நிரம்பி உள்ளன.

தற்போது ஆறுகளில் செல்லும் தண்ணீரைக்கொண்டு சம்பா, தாளடி சாகுபடி பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால் ஏரி, குளங்களுக்கு குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. இன்னும் உள்ள 696 ஏரி, குளங்கள் வடகிழக்குப்பருவமழையை எதிர்நோக்கி உள்ளன. வடகிழக்குப்பருவமழை பெய்தால் இந்த ஏரி, குளங்கள் ஓரிரு வாரங்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு ஏரி, குளங்கள் நிரம்பும் பட்சத்தில் இதன் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளும் தண்ணீர் பற்றாக்குறை இன்றி சாகுபடி செய்ய ஏதுவாக அமையும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story