ரூ.1¾ கோடி மதிப்புள்ள பாம்பு விஷத்துடன் 4 பேர் கைது
ரூ.1¾ கோடி மதிப்புள்ள பாம்பு விஷத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை மலாடு பகுதியை சேர்ந்த ராஜாராம் (வயது46) மற்றும் உதய்நாத் (37) ஆகியோர் பாம்பு விஷம் விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் போலி வாடிக்கையாளர்களை அனுப்பி சோதனை போட்டனர். அப்போது 2 பேரும் பாம்பு விஷம் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் வாடிக்கையாளர் போல அவர்களை தொடர்பு கொண்டனர். மேலும் 850 மில்லி லிட்டர் பாம்பு விஷம் தேவைப்படுவதாக கூறினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து நவிமும்பை மாந்த்வா படகு துறைமுகத்திற்கு படகு மூலம் பாம்பு விஷத்தை கொண்டு வந்தனர்.
அங்கு தயாராக நின்று கொண்டு இருந்த போலீசார் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1¾ கோடி மதிப்பிலான பாம்பு விஷத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் குஜராத் மாநிலம் வல்சாட்டை சேர்ந்த ராம்பிரசாத் (36) மற்றும் வாபியில் வசித்து வரும் சந்தோஷ்குமாரிடம் (35) இருந்து பாம்பு விஷத்தை வாங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குஜராத் சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். சந்தோஷ்குமார், ராம்பிரசாத் உத்தரபிரேதசத்தில் இருந்து பாம்பு விஷத்தை வாங்கியதாக போலீசில் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story