திருக்கோவிலூர் அருகே: டெங்கு கொசு ஒழிப்பு பணி - கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு


திருக்கோவிலூர் அருகே: டெங்கு கொசு ஒழிப்பு பணி - கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு
x
தினத்தந்தி 29 Oct 2018 3:00 AM IST (Updated: 28 Oct 2018 11:45 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே நடந்த டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

திருக்கோவிலூர், 

விழுப்புரம் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட இடங்களுக்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் திருக்கோவிலூர் அருகே முகையூர் ஊராட்சி ஒன்றியம் மேல்வாலை கிராமத்தில் நேற்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றது.

இந்த பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர், பொதுமக்களிடம் கூறுகையில், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களான டயர்கள், உடைந்த மண்பாண்டங்கள், பூந்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பயனற்ற ஆட்டுக்கல், உரல் போன்றவற்றில் நீர் ஏதும் தேங்காத வண்ணம் அவற்றை அகற்றவேண்டும். மேலும் வீட்டில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப்பெட்டி மற்றும் புதிதாக வீடு கட்டும் இடங்களில் நீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் உள்ள நீரை வாரம் ஒருமுறை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் அவர் அதிகாரிகளிடம் கூறுகையில் நீண்டநாட்களாக பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணித்து கொசு பெருக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் போது, வீடுகள், கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் எங்காவது கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கவேண்டும் என்று எச்சரித்தார்.

மேலும் கலெக்டர் சுப்பிரமணியன் அங்குள்ள பொதுமக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கண்டாச்சிபுரம் தாசில்தார் புஷ்பவதி, முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன், கண்டாச்சிபுரம் தலைமையிடத்து துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story