பெட்ரோல் டேங்கர் லாரி தீயில் எரிந்து நாசம்


பெட்ரோல் டேங்கர் லாரி தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Oct 2018 9:21 PM GMT (Updated: 28 Oct 2018 9:21 PM GMT)

பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

கரூர் மாவட்டம் ஆத்தூர் பிரிவு ரோடு பகுதியிலுள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆத்தூரில் இருந்து பெட்ரோல் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. கரூர் அருகே ஆட்டையாம்பரப்பை அடுத்த முத்துசோழிபாளையம் பகுதியில் வந்தபோது அந்த லாரியை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அங்கு வசிக்கும் மற்றொரு டேங்கர் லாரி டிரைவர் பன்னீர்செல்வத்துடன், அவர் பேசி கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த டேங்கர் லாரி தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் லாரியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த 2 பேரும் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து விட்டனர். இதில் பன்னீர்செல்வத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே லாரியின் டயர்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகின. டேங்கர் லாரியினுள் பெட்ரோல் இருந்ததால் அந்த லாரி வெடித்து விடுமோ? என்கிற அச்சம் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்பு படைவீரர்கள் நுரை தணிப்பான் மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் அந்த டேங்கர் லாரி முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்து விட்டது. இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் போலீசார் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரித்தனர். மேலும் பெட்ரோல் திருட்டில் ஏதும் ஈடுபடும் போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து மதுரையை சேர்ந்த அந்த லாரியின் உரிமையாளருக்கு போலீசார் தகவல் தெரிவித்து விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story