5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 339 பேர் கைது


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 339 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 11:00 PM GMT (Updated: 29 Oct 2018 4:58 PM GMT)

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 339 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவூட்டும் செலவினம் ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த 25-ந்தேதி முதல் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து 3-வது நாளாக கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்களத்திலேயே தக்காளி, எலுமிச்சை ஆகிய சாதங்களை தயார் செய்து சாப்பிட்டனர். ஆனால் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் நேற்று சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக, சங்க தலைவர் ஆனந்தராசு தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே இருந்து ஊர்வலமாக பாலக்கரை ரவுண்டானாவுக்கு வந்தனர். மறியலுக்கு அனுமதி கிடையாது என்பதால் அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது சத்துணவு ஊழியர்கள் திடீரென்று ஓடி சென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

மறியலை கை விடுமாறும், இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போராட்டக்காரர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 12 ஆண்கள் உள்பட 339 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் சுமார் ½மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து நெருக்கடியை போலீசார் ஒழுங்குபடுத்தினர். கைது செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story