கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஊர்வலம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Oct 2018 10:45 PM GMT (Updated: 29 Oct 2018 5:02 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.

பெரம்பலூர், 
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட தலைநகரில் ஊர்வலம் மற்றும் கோரிக்கை விளக்க கூட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்க புறப்பட்டனர். ஊர்வலத்தை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அழகர்சாமி தொடங்கி வைத்தார்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ரூ.19 ஆயிரத்து 500-ம், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.17 ஆயிரத்து 500-ம் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு ஊழியருக்கு இணையாக, கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.

அரசு ஊழியருக்கு வழங்குவது போல் பணிக்கொடை வழங்க வேண்டும். பாரபட்சமான போக்கை கைவிட்டு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதம் வழங்க வேண்டும். உதவியாளர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான காலவரையறை 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டாக மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க கூட்டம் நடந்தது.

இதற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சக்தி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் கலைச்செல்வி, விஜயலெட்சுமி, நிர்மலா, தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிமேகலை கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் ரத்தினமாலா சிறப்புரையாற்றினார்.

இதையடுத்து ரத்தினமாலா நிருபர்களிடம் கூறுகையில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 13, 14, 15-ந்தேதி ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் போராட்டமும், அதன்பிறகும் கோரிக்கை நிறைவேற்றவில்லையென்றால் வருகிற 18-ந்தேதி முதல் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.

Next Story