வேதாரண்யத்தில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
வேதாரண்யத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, தலைஞாயிறு, வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி உள்பட பல கடற்கரை கிராமங்கள் உள்ளன.
கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். தற்போது பருவநிலை மாற்றத்தால் பாக்ஜலசந்தியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வருவாய்த்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு அந்தந்த கிராம மீனவர் சங்கம் மூலம் ஒலி பெருக்கி வைத்து இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்து தடை விதித்துள்ளனர்.
நேற்று மீன்பிடித்து திரும்பிய கோடியக்கரை மீனவர்கள் வலையில் கத்தாழை மீன்கள் அதிக அளவில் சிக்கின. 18 முதல் 20 கிலோ எடை கொண்ட ஒரு கத்தாழை மீன் ரூ.1 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆண் கத்தாழை மீன்களின் வயிற்றில் உள்ள நெட்டி என்று அழைக்கப்படும் பீலி மருத்துவ குணம் கொண்டது. ஆண் கத்தாழை மீனிலிருந்து எடுக்கப்படும் நெட்டியில் இருதய நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆண் கத்தாழை மீனிலிருந்து எடுக்கப்படும் ஒரு கிலோ நெட்டி (பீலி) ரூ.2½ லட்சம் வரை விலை போகும். பெண் கத்தாழை மீனிலிருந்து எடுக்கப்படும் நெட்டி ஒரு கிலோ ரூ.1½ லட்சம் வரை விலை போகும். அதிக விலை கிடைக்ககூடிய மீன்கள் கிடைக்கும் நேரத்தில் இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு அறிவித்தது மீனவர்களை வேதனை அடைய செய்துள்ளது. இந்த தகவலை கோடியக்கரை மீனவர் கிராம பொறுப்பாளர் சித்ரவேலு தெரிவித்தார்.
Related Tags :
Next Story