அரசுப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி மேல்நிலைபள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி மேல்நிலைப்பள்ளி 1990–ல் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு 217 மாணவிகள் மற்றும் 271 மாணவர்கள் என மொத்தம் 482 பேர் படித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 20 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தநிலையில் பள்ளி நடைபெறும் போது அந்த பகுதியில் சுற்றிதிரியும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் பள்ளியின் உள்ளே நுழைந்து விடுகின்றன.
இதனால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதோடு, மதிய உணவு இடைவேளையின் போது மாணவ–மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் பள்ளியில் சுற்றுச்சுவர் கிடையாது என்பது தான். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாராமாகவும் மாறி வருகிறது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு பல முறை தெரிவிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் விடுமுறை நாட்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்பு கருதியும், அரசுப்பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.