கோத்தகிரியில்: இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது - பரபரப்பு வாக்குமூலம்


கோத்தகிரியில்: இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 30 Oct 2018 10:00 PM GMT (Updated: 30 Oct 2018 11:10 PM GMT)

கோத்தகிரியில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தாலியை கழற்றி வீசியதால் கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதி அருகே உள்ள ரோஸ்காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 32). இவருடைய மனைவி லோகேஸ்வரி (25). இவர்களுக்கு கார்த்திகேயன் (4) என்ற மகன் உள்ளான். ராஜேஷ் குமார் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் லோகேஸ்வரி தனது மகனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது மகன் கார்த்திகேயனின் கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுவனை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம ஆசாமியை பிடிக்க குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் லோகேஸ்வரியின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் அவரது செல்போனில் இருந்து சென்ற அழைப்புகளை சேகரித்தும், அவரது வீட்டிற்கு அடிக்கடி வருபவர்களின் விவரங்களை சேகரித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை போலீசார் சேகரித்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த எண்களில் ஒரு செல்போன் எண் மட்டும் சம்பவம் நடந்த நாள் முதல் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து தனிப்படை போலீசார் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளிக்கு சென்று அந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்த திருமூர்த்தி என்பவரது மகன் கவுரி சங்கரை (27) பிடித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கவுரி சங்கர், லோகேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். கவுரி சங்கர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் கவுரி சங்கர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் பகுதி நேர வேலையாக தனியார் நிறுவனத்தின் உடல் எடையை குறைக்கும் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தனியார் நிறுவனம் மாதந்தோறும் ஈரோட்டில் விற்பனையாளர் கூட்டம் நடத்தி வந்தது.

அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள லோகேஸ்வரி வந்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் லோகேஸ்வரி தனக்கு திருமணம் ஆனதை மறைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுரி சங்கரை சென்னிமலை கோவிலில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டு உள்ளார். இதனைதொடர்ந்து கவுரி சங்கர் கோத்தகிரிக்கு அடிக்கடி சென்று அவருடன் தங்கி வந்து உள்ளார். இந்தநிலையில் லோகேஸ்வரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது கவுரி சங்கருக்கு தெரியவந்தது.
இதனைதொடர்ந்து கடந்த 27-ந் தேதி மாலை 5 மணியளவில் கோத்தகிரிக்கு சென்று லோகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கவுரி சங்கர் கட்டிய தாலியை கழற்றி வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுரிசங்கர், லோகேஸ்வரியை தாக்கி அங்கிருந்த கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி உள்ளார். இதில், மயங்கி கீழே விழுந்த லோகேஸ்வரியின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதனைகண்ட அவரது மகன் கார்த்திகேயன் வெளியே சொல்லிவிடுவான் என்ற அச்சத்தில் அவனுடைய கழுத்தையும் அறுத்து விட்டு லோகேஸ்வரி கழற்றி வீசிய தாலியை எடுத்து விட்டு தப்பி சென்றார். அந்த தாலியை திருப்பூரில் உள்ள அடகுக்கடை ஒன்றில் அடகு வைத்து பணத்தை பெற்று ஈரோட்டுக்கு சென்று உள்ளார். மேலும், தான் பயன்படுத்திய செல்போன் சிம் கார்டை கழற்றி வைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனைதொடர்ந்து கவுரி சங்கர் அடகுவைத்த 5 பவுன் நகையை மீட்ட போலீசார் அவரை கோத்தகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா வாழ்த்து தெரிவித்தார்.

Next Story