கல்வி சுற்றுலா மூலம் அறிவுத்திறனை மாணவர்கள் மேம்படுத்த வேண்டும் கலெக்டர் கணேஷ் அறிவுரை
பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா மூலம் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் சுற்றுலாவினை மேம்படுத்த தமிழக அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயின்று வரும் பள்ளி மாணவர்களை சுற்றுலாத்துறையின் சார்பில் கட்டணமின்றி சுற்றுலா அழைத்து செல்ல தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் 150 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த ஒரு நாள் கல்வி சுற்றுலாவில் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம், தஞ்சாவூர் பெரியகோவில், தர்பார் ஹால், சரஸ்வதி மஹால் நூலகம், அரசு கலைக்கூடம் ஆகிய இடங்களை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், புத்தக பை, கணித பெட்டிகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. இந்த சுற்றுலாவை புதுக்கோட்டை அருங்காட்யகத்தில் கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், சுற்றுலா செல்வது மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதுடன் வகுப்பு பாடங்களை ஒட்டிய வரலாற்று நிகழ்வு தளங்களை நேரில் கண்டு தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். மேலும் இதுபோன்ற கல்வி சுற்றுலாவின் மூலம் தேர்வு காலங் களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம் தவிர்க்கப்படும். எனவே பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவினை உரிய முறையில் பயன்படுத்தி தங்களது அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story