சென்னையில் தீபாவளி வாழ்த்து படங்களுடன் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்


சென்னையில் தீபாவளி வாழ்த்து படங்களுடன் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 1 Nov 2018 4:30 AM IST (Updated: 1 Nov 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில், பயணிகளை கவரும் விதமாக தீபாவளி வாழ்த்து படங்களுடன் 15 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளை கவர உலக தரத்தில் சேவை அளித்து வருவதுடன், ரெயில் நிலையங்களில் பல்வேறு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக பயணிகளை கவருவதற்காக மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. இதுதவிர ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்கள் வாடகைக்கு விடும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இதுதவிர பண்டிகை நாட்களில் கூடுதலான நேரங்களில் ரெயில் சேவைகளையும் அளித்து வருகிறது.

இந்தநிலையில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளை கவரும் வகையில், கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனையில் இருந்து தீபாவளி வாழ்த்து படங்களுடன் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது.

சென்னையில் 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 15 ரெயில்களில் தீபாவளி பண்டிகையை குறிக்கும் வகையிலான குத்து விளக்குகள், வரிசையாக அடுக்கப்பட்ட விளக்குகளின் படங்கள் மற்றும் ‘இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ போன்ற படங்கள் ரெயில்களில் ஒட்டப்பட்டு உள்ளன. கோலங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இருந்தன.

இந்த ரெயில், பயணிகள் பார்வையிடுவதற்காக கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த 15 ரெயில்களும் விமானநிலையம்- ஏ.ஜி-டி.எம்.எஸ்., பரங்கிமலை- சென்னை சென்டிரல் மார்க்கங்களில் இயக்கப்படுகிறது.

Next Story