வீட்டிற்குள் புகுந்து தாய்-மகளிடம் 10¾ பவுன் தாலி சங்கிலிகள் பறிப்பு
வீட்டிற்குள் புகுந்து தாய்-மகளிடம் 10¾ பவுன் தாலி சங்கிலியையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், வாரணவாசி கீழத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி(வயது 47). இவர்களுக்கு சிலம்பரசன் என்கிற மகனும், இலக்கியா(28) என்ற மகளும் உள்ளனர். சிலம்பரசன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இலக்கியாவை அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ்(38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கனகராஜ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாகவே இலக்கியா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு ராமசாமி வயலுக்கு புறப்பட்டார். அப்போது அவர் கதவை பூட்டாமல் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் ராமசாமி வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த இலக்கியா கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த இலக்கியா கையால் சங்கிலியை பிடித்துக் கொண்டு மர்ம நபர்களுடன் போராடினார். அப்போது மர்ம நபர்கள் அதே சங்கிலியை வைத்து அவரது கழுத்தை நெரித்தனர். இதனால் வலியால் அலறி துடித்த சங்கிலியில் இருந்து கையை எடுத்து விட்டார். இதில் சங்கிலியை மர்ம நபர்கள் வேகமாக பிடித்து இழுத்ததில், அவர்களின் கையில் சங்கிலி சிக்கியது. மகளின் அலறல் சத்தத்தை கேட்டு எழுந்த மகாலட்சுமி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனாலும் மர்ம நபர்கள் மகாலட்சுமியின் கழுத்தில் கிடந்த 2¾ பவுன் சங்கிலியையும் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டின் முள் வேலியை தாண்டி குதித்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசில் ராமசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story