திண்டிவனத்தில்: கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு - முகமூடி கொள்ளையனுக்கு வலைவீச்சு


திண்டிவனத்தில்: கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு - முகமூடி கொள்ளையனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Nov 2018 9:45 PM GMT (Updated: 1 Nov 2018 8:12 PM GMT)

திண்டிவனத்தில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச்சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம், 

திண்டிவனத்தில் உள்ள மரக்காணம் சாலை சக்கரபாணி நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவருடைய மனைவி ஹேமலதா(வயது 63). திண்டிவனம் பகுதியில் இருந்து 15 பேர், ஒரு வேனில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். அவர்களுடன் ஹேமலதாவும் சென்றிருந்தார். கோவில்களுக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு அந்த வேன், சக்கரபாணி நகருக்கு வந்தது. வேனில் இருந்து இறங்கிய ஹேமலதா, தனது பையுடன் வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்துகொண்டு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவர் ஹேமலதாவை வழிமறித்தபடி மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சத்தம்போட்டால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று கூறி தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார்.

பின்னர் ஹேமலதாவை தாக்கி விட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை அந்த வாலிபர் பறித்தார். மேலும் அவரது பையையும் பறித்து விட்டு, அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டார். அந்த பையில் ஆயிரம் ரூபாய், ஒரு செல்போன் மற்றும் துணிகள் இருந்தன. உடனே ஹேமலதா, திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதியில் யாரும் இல்லை. உடனே அவர், தனது வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் நடந்ததை கூறி கதறி அழுதார்.

இதுகுறித்து ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story