தீபாவளி பண்டிகைக்காக பலகாரங்களை தயாரித்து விற்பவர்கள் தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துங்கள் கலெக்டர் வேண்டுகோள்


தீபாவளி பண்டிகைக்காக பலகாரங்களை தயாரித்து விற்பவர்கள் தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துங்கள் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Nov 2018 10:30 PM GMT (Updated: 2 Nov 2018 5:45 PM GMT)

தீபாவளி பண்டிகைக்காக பலகாரங்கள் தயாரித்து விற்பவர்கள் தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துங்கள் என்று கலெக்டர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

தீபாவளி பண்டிகையையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் பலகாரங்களை தயாரித்து விற்கும் வணிகர்கள் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற வேண்டும். தரமான மூலப்பொருட்களால் சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும், அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது. சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும். பால் சார்ந்த இனிப்பு வகைகளை பண்டிகை காலத்திற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் தயாரிக்க வேண்டும். மேலும் போக்குவரத்து பொறுத்தோ, வியாபாரத்தை பொறுத்தோ, பால் சம்பந்தபட்ட இனிப்பு வகைகளை கையாளும் போது துருப்பிடிக்காத பாத்திரங்களை பயன்படுத்தி கெடாமலும், மாசு படாமலும் பாதுகாத்திடல் வேண்டும். மேற்படி உணவு தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் தன் சுத்தத்தை கடைபிடித்து நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவை வழங்கிட வழி வகை செய்ய வேண்டும்.

‘பேக்கிங்’ செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் நிறுவனங்களின் முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு தேதி மற்றும் பயன்பாட்டுக்கால அளவு மற்றும் சைவ, அசைவ குறியீடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விவர சீட்டில் இடம்பெற வேண்டும். உணவுப்பொருட்களை ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்காவண்ணம் சுகாதாரமான முறையில் விற்பனை செய்திட வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Next Story