வில்லிவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


வில்லிவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 3 Nov 2018 4:00 AM IST (Updated: 2 Nov 2018 11:33 PM IST)
t-max-icont-min-icon

வில்லிவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அம்பத்தூர்,

சென்னை வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில் உள்ள ரெட்டி தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான ரோந்து போலீசார், அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று சோதனை செய்தனர்.

அங்கு ஏ.டி.எம். எந்திரம், உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

உதவி கமிஷனர் முத்துமாணிக்கம் தலைமையில் போலீசார் விரைந்துவந்து ஏ.டி.எம். மையத்தில் சோதனை மேற்கொண்டனர். கொள்ளையர்கள், கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து உள்ளனர். ஆனால் பணம் இருந்த பகுதியை அவர்களால் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்று உள்ளனர்.

முன்னதாக கொள்ளையர்கள், தங்கள் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகாமல் இருக்க ஏ.டி.எம். மையத்தின் வெளிப்பகுதி வாசல் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்து உள்ளனர். உள்பகுதியில் உள்ள கேமராவை கீழ் நோக்கி திருப்பி வைத்து உள்ளனர். அங்கு காவலாளியும் நியமிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. அந்த தெருவில் உள்ள பிற கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.

அதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் சந்தேகப்படும்படியான நடமாட்டம் பதிவாகி உள்ளது. எனவே ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள மோட்டார்சைக்கிள் எண்ணை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தனியார் வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Next Story