லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய வேலூர் ‘ஆவின்’ பொதுமேலாளர் பணியிடை நீக்கம்


லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய வேலூர் ‘ஆவின்’ பொதுமேலாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 2 Nov 2018 11:00 PM GMT (Updated: 2 Nov 2018 10:05 PM GMT)

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய வேலூர் ஆவின் பொதுமேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர், 
வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமேலாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்தவர் கே.எஸ்.முரளிபிரசாத் (வயது 55). இவர் தனக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் 11 பேரிடம், அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பள நிலுவை தொகையில் கமிஷன் கேட்டுள்ளார்.

அதற்கான கமிஷனை செயலர் (பொறியியல்) சேகர் என்பவர் வசூல் செய்து நேற்று முன்தினம் பொது மேலாளர் அலுவலகத்தில் வழங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முரளிபிரசாத் காரில் இருந்த ரூ.11 லட்சம், சேகரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம், அருகில் தோட்டத்தில் அனாதையாக கிடந்த ரூ.1 லட்சம் என ரூ.14 லட்சத்து 85 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முரளிபிரசாத்தை சென்னை ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த தகவலை வேலூர் ஆவின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story