ஓமியோபதி மருத்துவத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


ஓமியோபதி மருத்துவத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 2 Nov 2018 11:15 PM GMT (Updated: 2 Nov 2018 11:02 PM GMT)

ஓமியோபதி மருத்துவத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

குலசேகரம், 

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக்கல்லூரியின் 18-வது ஆண்டு தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. இதற்கு கல்லூரி சேர்மன் டாக்டர் சி.கே.மோகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுகதன் வரவேற்றார்.

விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, ஓமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர் சாமுவேல் ஹனிமேன் சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து, தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குலசேகரத்தில் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. அகில இந்திய ஓமியோபதி மருத்துவக்குழுவின் அனைத்து வகையான சட்டதிட்டங்களை பின்பற்றி, படிப்படியாக பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி பிரிவு இங்கு உள்ளது. அகில இந்திய அளவில் உள்ள 135 ஓமியோபதி மருத்துவகல்லூரிகளில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியாவிலேயே முதலிடத்தை சாரதா கிருஷ்ணா கல்லூரி பெற்று, குமரி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து உள்ளது. இதற்காக கடந்த 17 ஆண்டுகளாக கடினமாக உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு யோகா, ஓமியோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவ முறைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மோகன் நினைவு பரிசு வழங்கினார். விழாவில் பங்கஜகஸ்தூரி ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹரீந்திரன் நாயர், கேரள மாநிலத்தின் ஓமியோபதி மருத்துவ கவுன்சிலின் தலைவர் டாக்டர் ரெவி.எம்.நாயர், டாக்டர்கள் ஈஸ்வரதாஸ், சபரீஸ்.பி நாயர், பவ்யா, அறக்கட்டளை இயக்குனர் சந்திரலேகா மோகன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் டாக்டர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.

Next Story