மாவட்டத்தில் தொடர் மழை: குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது


மாவட்டத்தில் தொடர் மழை: குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 3 Nov 2018 10:30 PM GMT (Updated: 3 Nov 2018 9:09 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

கடலூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 1-ந்தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் கடலோர மாவட்டமான கடலூரில் 31-ந்தேதி நள்ளிரவு 11 மணி அளவிலேயே இடி-மின்னலுடன் வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியது.

1-ந்தேதி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அதிகமழை பெய்தது, ஆனால் மாவட்டத்தின் உள்பகுதிகளில் லேசான மழையே பெய்தது, அடுத்த நாள், அதாவது 2-ந்தேதி கடலோர பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் உள்பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. 1-ந்தேதி மாவட்டத்தில் 461.25 மி.மீ. மழை பெய்திருந்தது, ஆனால் 2-ந்தேதி 905.30 மி.மீ. மழை பெய்தது.

இந்த நிலையில் தொடர்ந்து நேற்றும் கடலூரில் மழை பெய்தது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது, காலை 7 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்தது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் வெயில் அடிக்க ஆரம்பித்தது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நேற்றும் பரவலாக மழை பெய்தது. காலைநேரத்தில் மட்டுமே பெய்ததால், தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வழக்கம் போல் மக்கள் கடைத்தெரு பகுதிகளுக்கு சென்றனர். கடலூரில் பிரதான சாலைகள் எங்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்பட்டது.

தொடர் மழையால் கடலூர் நகர பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நகர மக்கள் தற்போதைய மழைக்கே கடும் இன்னலுக்கு உள்ளாகிஉள்ளனர். இதேநிலைதான் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் நீடிக்கிறது.

நேற்று காலை 8-30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக நெய்வேலி அருகே வடக்குத்து கிராமத்தில் 99 மி.மீ. மழை பெய்தது. இப்பகுதியில் தான் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாளில் 40 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தின் இதர பகுதிகளில் நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

காட்டுமன்னார்கோவில் 94, கொத்தவாச்சேரி 72, குறிஞ்சிப்பாடி 67, புவனகிரி 59, லால்பேட்டை 56.80, பரங்கிப்பேட்டை 52, கடலூர் 32, கடலூர் கலெக்டர் அலுவலகம் 29.30, பெலாந்துறை 28.60, சேத்தியாத்தோப்பு 27.40, கீழச்செருவாய் 26, வேப்பூர் 25, அண்ணாமலை நகர் 24.60, காட்டுமயிலூர் 23, மே.மாத்தூர் 23, தொழுதூர் 23, வானமாதேவி 22.80, சிதம்பரம் 22.40, விருத்தாசலம் 22, ஸ்ரீமுஷ்ணம் 21.20, குடிதாங்கி 17.70, குப்பநத்தம் 15.80, பண்ருட்டி 12.50, லக்கூர் 9.20.

Next Story