ராசிபுரம், நாமக்கல்லில் 3 வீடுகளில் திருடியவர் கைது 24½ பவுன் நகைகள் மீட்பு


ராசிபுரம், நாமக்கல்லில் 3 வீடுகளில் திருடியவர் கைது 24½ பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 5 Nov 2018 4:15 AM IST (Updated: 5 Nov 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம், நாமக்கல்லில் 3 வீடுகளில் திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 24½ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

ராசிபுரம்,

ராசிபுரம் டவுன் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் குமரப்பன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 72). இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமரப்பன் இறந்துவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த சாந்தகுமாரி உடல்நிலை சரியில்லாததால் ராசிபுரத்தில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்து வந்தார். பூட்டிக்கிடந்த இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகைகள் திருட்டு போய்விட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி சாந்தகுமாரியின் மருமகனும், ஓய்வு பெற்ற வணிகவரி அலுவலருமான சுப்பிரமணி (61) ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.அதேபோல் ராசிபுரம் தாலுகா ஆயில்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அசோக் என்பவரது வீட்டில் 4 பவுன் நகைகளும், நாமக்கல் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது வீட்டில் இருந்து 11½ பவுன் நகைகளும் திருட்டு போனது.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் மேற்பார்வையில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் திருடனை பிடிக்க பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட்டில் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர் இரும்பு கம்பி ஒன்றை வைத்திருந்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் 3 வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவரின் பெயர் முருகன் என்கிற ரிவால்வர் முருகன் (55) என்பதும், அவர் கோவை அருகேயுள்ள சூலூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பெரியநாயகத்தின் மகன் என்பதும் தெரிய வந்தது. கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து திருட்டு தொழில் ஈடுபட்டு வந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் முருகன் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 24½ பவுன் நகைகளை மீட்டனர். கைது செய்யப்பட்ட முருகனை போலீசார் பரமத்தி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு தனபால் உத்தரவின்பேரில் முருகன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story