குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் - மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் - மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 2018-11-05T04:29:23+05:30)

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோ.மாவிடந்தல் ஊராட்சியில் உள்ளது பொன்னேரி கிராமம். இங்குள்ள பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு அங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, தினசரி காலை, மாலை நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த, ஒரு மாதத்திற்கு முன்பு இந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படும் மின்மோட்டார் பழுதானது. இதன் பின்னர் ஊராட்சி நிர்வாகத்தால், இதுவரையில் மின்மோட்டார் சரி செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் இந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் அருகில் உள்ள விவசாய நிலங்கள், கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வந்தனர்.

இதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை காலி குடங்களுடன் ஒன்று திரண்டு விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த, விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சாலையோரமாக நின்று, காலி குடங்களுடன் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, நாளைக்குள்(அதாவது இன்று) குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story