தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு


தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு
x
தினத்தந்தி 5 Nov 2018 10:00 PM GMT (Updated: 5 Nov 2018 7:58 PM GMT)

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேனி,

தீபாவளி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வேண்டும் என்பதற்காக மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக தேனி நகரில் பஸ் நிலையம், கடை வீதிகள் உள்பட பொதுமக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் தேனி தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மனோகரன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கூறியதாவது:-

விபத்தில்லா தீபாவளி கொண்டாடவும், பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்கவும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மக்கள் கூடும் இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரியோர்களின் மேற்பார்வையில் சிறுவர், சிறுமிகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு கொளுத்தும் போது இறுக்கமான ஆடை அணிய வேண்டும். முடிந்தவரை பருத்தி ஆடையாக இருக்கட்டும். குழந்தைகள் சட்டைப் பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்கக் கூடாது. திரியில் தீ வைத்தும் வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடிப்பவர்கள் மீது தீ விபத்து ஏற்பட்டால் ஓடக்கூடாது. உடனே தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். அல்லது தரையில் படுத்து உருள வேண்டும். நீண்ட வத்திகளை கொண்டே பட்டாசு வெடிக்க வேண்டும். தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும். பேனா மை, எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story