தீபாவளி இனாம் கேட்டு கடைக்காரருக்கு மிரட்டல்: ஓய்வுபெற்ற வணிக வரித்துறை அலுவலர் உள்பட 2 பேர் கைது
தீபாவளி இனாம் கேட்டு கடைக்காரரை மிரட்டிய ஓய்வுபெற்ற வணிக வரித்துறை அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை பைபாஸ் ரோடு ராம்நகரில் ஆட்டோமொபைல்ஸ் கடை வைத்திருப்பவர் கருமுத்து சுந்தரம். இவரது கடைக்கு நேற்று மதியம் ஆட்டோவில் 2 பேர் வந்தனர். அவர்கள் கடைக்குள் வந்து தாங்கள் வணிக வரித்துறையில் பணியாற்றுவதாகவும், தீபாவளி இனாம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் எந்த அலுவலகத்தில் நாங்கள் பணிபுரிகிறோம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இனாம் கொடுக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுத்து கடையை பூட்டுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து கருமுத்து சுந்தரம், அந்த நபர்களிடம் அலுவலக தொலைபேசி எண்ணை கொடுங்கள் என்று கேட்டவுடன் ஒருவர் அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே அங்கிருந்த கடை ஊழியர்கள் மற்றொருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவரது பெயர் சிங்காரம் மகன் அசோகன் என்றும், தப்பி ஓடியவர் பெயர் முத்து என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் வணிக வரித்துறையில் வேலை பார்த்து 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் என்பதும் தெரியவந்தது.
பின்னர் ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அலுவலர் அசோகன் மற்றும் அவர் வந்த ஆட்டோ டிரைவரை பிடித்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் கடைக்காரர்கள் ஒப்படைத்தனர். 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story