நாட்டு வெடி வெடித்ததில் பள்ளி மாணவன் சாவு தீபாவளி அன்று சோகம்


நாட்டு வெடி வெடித்ததில் பள்ளி மாணவன் சாவு தீபாவளி அன்று சோகம்
x
தினத்தந்தி 8 Nov 2018 4:30 AM IST (Updated: 8 Nov 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே தீபாவளி பண்டிகை அன்று மண்ணில் புதைத்து வைத்து கொளுத்திய நாட்டு வெடி திடீரென்று வெடித்ததில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி சக்திநகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு சக்திவேல், சுந்தரவேல், ஜோதிவேல், மணிவேல் ஆகிய 4 மகன்கள் இருந்தனர்.

இவர்களில் கடைசி மகனான மணிவேல்(வயது 12) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று மாணவன், தனது நண்பர்களான சூர்யா(12), வசந்த்(12) ஆகியோருடன் பட்டாசு வெடித்தான்.

அப்போது நாட்டு வெடிகளை மண்ணில் புதைத்து வைத்து அவர்கள் வெடித்தனர். அதில் ஒரு நாட்டு வெடியை கொளுத்திய போது, அது வெடிப்பதற்கு காலதாமதமானது.

இதனால் சந்தேகம் அடைந்த 3 பேரும், மீண்டும் அந்த நாட்டு வெடி அருகே சென்று பார்த்த போது எதிர்பாராதவிதமாக அந்த வெடி திடீரென வெடித்தது. அதில் 3 பேரும் சிக்கியதால் அவர்கள் படுகாயம் அடைந்தனர். வெடியின் மிக அருகில் சென்றிருந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான். மற்ற 2 பேரையும் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனுக்கு நாட்டு வெடி எப்படி கிடைத்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

தீபாவளி பண்டிகை அன்று நாட்டு வெடி வெடித்ததில் மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story