சர்கார் பட பேனர் கிழித்ததால் தகராறு: விஜய் ரசிகர் தூக்குப்போட்டு சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது


சர்கார் பட பேனர் கிழித்ததால் தகராறு: விஜய் ரசிகர் தூக்குப்போட்டு சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 3:45 AM IST (Updated: 8 Nov 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

சர்கார் பட பேனர் கிழிக்கப்பட்ட தகராறில் விஜய் ரசிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனப்பாக்கம், 

காவேரிப்பாக்கம் அருகே ஈராளச்சேரி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

விஜய் ரசிகரான இவர் தீபாவளி கொண்டாடுவதற்காக கடந்த 4-ந் தேதி விடுமுறையில் ஈராளச்சேரி கிராமத்துக்கு வந்தார். நேற்று முன்தினம் நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது. இந்த படம் வெற்றியடைவதற்காக அந்த பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில் மணிகண்டன் போட்டோவை வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பேனரை மணிகண்டன் கிழித்ததாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள், மணிகண்டன் வீட்டுக்கு சென்றனர். அப்போது மணிகண்டன் பக்கத்தில் உள்ள அவரது சித்தப்பா ராஜேந்திரன் (45) வீட்டில் இருந்தார். அங்கு சென்ற விஜய் ரசிகர்கள் மணிகண்டனிடம் தகராறு செய்தனர். அப்போது மணிகண்டனை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

உடனடியாக பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறி ராஜேந்திரன் சமாதானம் செய்து அனைவரையும் அனுப்பி வைத்தார். இதையடுத்து மணிகண்டனை வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறி வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து தாழ்ப்பாள் போட்டுள்ளார்.

பின்னர் 30 நிமிடம் கழித்து அறையை ராஜேந்திரன் திறந்தபோது மணிகண்டன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மணிகண்டனின் தந்தை தயாளன் (50) போலீசில் புகார் அளித்தார். அதில் விஜய் ரசிகர்கள் தாக்கியதால் தான் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

அதன்பேரில் காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக விஜய் ரசிகர்கள் ஓச்சேரியை சேர்ந்த சீனிவாசன் (22), ஈராளச்சேரியை சேர்ந்த அரிதாஸ் (23) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story