திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது 13-ந் தேதி சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. 13-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. 13-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
கந்தசஷ்டி திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்றாகும். கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களின் பிரதான கும்பங்கள் மற்றும் சிவன், பார்வதி உள்ளிட்ட பரிவாரமூர்த்திகளின் கும்பங்கள் என மொத்தம் 46 கும்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
யாகசாலை பூஜை
காலை 8 மணிக்கு கோவில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் செல்வராஜ், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோரிடம் இருந்து, காப்பு கட்டிய முத்துகிருஷ்ணன் பட்டர் தாம்பூலம் பெற்று, யாகசாலை பூஜையை தொடங்கினார். யாகசாலையில் விக்னேசுவர பூஜை, புண்ணியாகவாசனம், பூதசுத்தி, கும்ப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்த பின்னர், யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது. மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
சுவாமி தங்க ரதத்தில் வீதி உலா
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவில் சேர்ந்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து விரதத்தை தொடங்கினர். அதிகாலையில் பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் கிரிப்பிரகாரத்தைச் சுற்றிலும் ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் தங்கி, விரதம் இருந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
13-ந் தேதி சூரசம்ஹாரம்
6-ம் திருநாளான வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story