மதுரவாயலில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி; கார் ஒர்க்‌ஷாப்புக்கு ‘சீல்’ மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி


மதுரவாயலில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி; கார் ஒர்க்‌ஷாப்புக்கு ‘சீல்’ மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 8 Nov 2018 9:30 PM GMT (Updated: 8 Nov 2018 6:25 PM GMT)

மதுரவாயலில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்ததால் கார் ஒர்க்‌ஷாப்புக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கடைகள், கார் ஒர்க்‌ஷாப்புகள் என பல்வேறு இடங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகும் நிலையில் உள்ளதா? என மாநகராட்சி வட்டார துணை கமிஷனர் (தெற்கு) கோபால்சுந்தர்ராஜ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது மதுரவாயல் 147-வது வார்டுக்கு உட்பட்ட பல்லவன் நகர், கலைமணி 4-வது தெருவில் யுகேஷ் என்பவருக்கு சொந்தமான கார்களில் பழுது நீக்கி பெயிண்டு அடிக்கும் ஒர்க்‌ஷாப்பில் சோதனை நடத்தினர். அதில் அங்கு, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்ததும், உரிய அனுமதி இன்றி அந்த கார் ஒர்க்‌ஷாப் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு இருந்த டெங்கு கொசுப்புழுக்களை அழித்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த கார் ஒர்க்‌ஷாப்பை பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் அதன் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதேபோல் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story