இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்ய முயற்சி: ஜாமீனில் வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது


இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்ய முயற்சி: ஜாமீனில் வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 9:45 PM GMT (Updated: 8 Nov 2018 7:49 PM GMT)

இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்ய முயன்ற விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர், 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடலை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). கோபி மதுவிலக்கு போலீஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அயனப்பிரியா (38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அயனப்பிரியாவின் சித்தப்பா வேலுச்சாமியின் மகள் திவ்யபாரதி (23). அந்தியூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். திவ்யபாரதியை வெங்கடாசலம் 2-வதாக திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி வெங்கடாசலம் மனைவி மற்றும் குழந்தைகளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அவர்களை காரில் அழைத்துச்சென்றார். செல்லும் வழியில் ஈரோட்டில் தேர்வு எழுத சென்ற திவ்யபாரதியையும் கோவிலுக்கு அழைத்தார். அவரும் காரில் அயனப்பிரியாவுடன் பயணம் செய்தார். திண்டுக்கல் அருகே உள்ள தேவனம்பட்டி சென்றபோது காரை ஓட்டிக்கொண்டு இருந்த வெங்கடாசலம் திவ்யபாரதியை பார்த்து, ‘உன்னை நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன். அதற்குத்தான் உங்களை அழைத்து செல்கிறேன்‘ என்று கூறியுள்ளார்.

பணி இடைநீக்கம்

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அயனப்பிரியாவும், திவ்யபாரதியும் காரை நிறுத்த சொல்லி தகராறில் ஈடுபட்டார்கள். அப்போது தேவனம்பட்டி சோதனை சாவடி வந்தது. அதனால் வெங்கடாசலம் காரை நிறுத்தினார். உடனே அயனப்பிரியா கதவை திறந்துகொண்டு ஓடி சோதனை சாவடியில் நின்றுகொண்டு இருந்த போலீசாரிடம் கணவரின் திட்டத்தை பற்றி கூறினார். இதுபற்றி கேட்பதற்காக போலீசார் கார் அருகே வந்தார்கள். அதற்குள் காரில் இருந்து இறங்கி வெங்கடாசலம் ஓடிவிட்டார். உடனே இதுபற்றி அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வெங்கடாசலத்தை கைது செய்தார்கள். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் வெங்கடாசலத்தின் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த வெங்கடாசலம் தினமும் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

இந்தநிலையில் திவ்யபாரதி அந்தியூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘வெங்கடாசலம் ஜாமீனில் வெளியே வந்த நாளில் இருந்து என் புகைப்படத்தை முகநூலில் போட்டு, என்னை திருமணம் செய்துகொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ஆப்பக்கூடலில் பதுங்கி இருந்த வெங்கடாசலத்தை நேற்று மீண்டும் கைது செய்தார்கள். அதன்பின்னர் அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள்.

இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்ய முயன்ற விவகாரத்தில் முன்னாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் 2 முறை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story