20 தொகுதிகளில் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி


20 தொகுதிகளில் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2018 4:45 AM IST (Updated: 9 Nov 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

20 தொகுதிகளில் தேர்தல் ஆணையம் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார்.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்துவின் 12-வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அ.ம.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அன்னதானத்தை தொடங்கி வைத்த தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. 20 தொகுதி இடைத் தேர்தலில் மட்டும் அல்ல பொதுதேர்தல் வந்தாலும் மிக மோசமான தோல்வியை சந்திக்கும். தற்போது உள்ள அ.தி.மு.க. அரசால் மத்திய அரசையும் எதிர்க்க முடியாது, நடிகர் விஜய்யையும் எதிர்க்க முடியாது.

ஆர்.கே.நகர் இடை தேர்தலில் டெபாசிட்டை இழந்த தி.மு.க.வுடன் கூட்டு சேர வேண்டிய அவசியம் அ.ம.மு.க.விற்கு இல்லை. 20 தொகுகளில் இடைத்தேர்தலை அறிவித்துவிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்தி அதன் மூலம் இந்த ஆட்சியை 2 வருடம் தொடர்ந்து நடத்தலாம் என்ற ஆசையில் அ.தி.மு.க. உள்ளது.

20 தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக இடைத்தேர்தலை அறிவித்து நடத்த வேண்டும். நடிகர் கமல்ஹாசன் சினிமாவை வைத்து மட்டுமே அரசியல் செய்கிறார். நடிகர் என்ற முறையில் மட்டுமே அவருக்கு கூட்டம் சேருகிறது.

பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வதாரத்தை பாதுகாக்க விழா காலங்களில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் விதித்த நேரக்கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியின் அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது சட்டசபையில் தி.மு.க.வுடன் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இன்னும் ஏன் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. 20 தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றிபெற்ற பின்பு தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கம் ராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மகளிரணி செயலாளர் கவிதா தனசேகரன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் போஸ், இளைஞரணி துணை செயலாளர் அழகுராஜா, வக்கீல் பிரிவு செயலாளர் நல்லதம்பி, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை செய்திருந்தார்.

Next Story