ஆத்தூரில் சிறுமி தலை துண்டித்து கொலை: கைதான வாலிபர் சேலம் கோர்ட்டில் ஆஜர்


ஆத்தூரில் சிறுமி தலை துண்டித்து கொலை: கைதான வாலிபர் சேலம் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 8 Nov 2018 11:04 PM GMT (Updated: 8 Nov 2018 11:04 PM GMT)

ஆத்தூரில் சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகிற 22-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகள் ராஜலட்சுமி (வயது 14). இவர், தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி வீட்டில் இருந்தபோது, சிறுமி ராஜலட்சுமியை அதேபகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதுதவிர, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், சிறுமி கொலை வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை விரைந்து முடிக்கும் வகையில் நேற்று தினேஷ்குமாரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலீஸ் உதவி கமிஷனர் தினகரன், இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து தினேஷ்குமாரின் நீதிமன்ற காவலை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். பின்னர், அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். அந்த சமயத்தில், தினேஷ்குமார், என்னை கொன்று விடுங்கள்..! தூக்கில் போடுங்கள்..! என்றும், சினிமா பார்த்து பெரிய தவறை செய்துவிட்டேன் என்றும் கண்ணீர்மல்க புலம்பியதை காணமுடிந்தது.



Next Story