டெங்கு கொசு உற்பத்திக்கு ஏதுவாக சாக்குபைகள்: தோகைமலை ஒன்றிய நிர்வாகத்துக்கு ரூ.500 அபராதம்


டெங்கு கொசு உற்பத்திக்கு ஏதுவாக சாக்குபைகள்: தோகைமலை ஒன்றிய நிர்வாகத்துக்கு ரூ.500 அபராதம்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:00 PM GMT (Updated: 9 Nov 2018 8:05 PM GMT)

டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் சாக்கு பைகளை பராமரிப்பின்றி அடுக்கி வைத்திருந்த தோகைமலை ஒன்றிய நிர்வாகத்துக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சிக்குட்பட்ட நாகனூர் காலனி, கம்பத்தாம்பாறை, நாகனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று, மழைநீர் தேங்கும் வகையில் பிளாஸ்டிக், தேங்காய் ஓடு, டயர், உரல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருக்கிறதா? என பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள குடிநீர் தொட்டி, சாக்கடை வடிகால் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? என பார்வையிட்டு, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து குளோரினேசன் செய்ப்பட்ட நீரையே வினியோகிக்க வேண்டும் என ஒன்றிய ஆணையர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் தோகைமலை ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், டெங்கு தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்ப்டடிருந்த சத்துணவு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சாக்கு பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதற்கு வழிவகை இருந்ததை கண்டார். இதையடுத்து கொசுக்கள் வந்து அடைந்து கொள்ளும் வகையில் சாக்குபைகளை ஆங்காங்கே போட்டு வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பி அதனை முறையாக அடுக்கி வைக்குமாறு அறிவுறுத்தினார். இதில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் சுட்டி காட்டினார்.

மேலும் கொசுக்கள் தங்குவதற்கு சூழலலை ஏற்படுத்தி உள்ளது என்று தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு ரூ.500 அபராதம் விதித்தார். மேலும் உடனடியாக சாக்குபைகளை அப்புறப்படுத்த வில்லை என்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிறுசேமிப்பு தமிழ்செல்வி, ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், ராணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பாஸ்கர், சுகாதார ஆய்வாளர்கள் பொன்னுச்சாமி, பாலகோபாலநாயர் உட்பட சுகாதாரப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story