நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்திய ராணுவத்தில் அதி நவீன பீரங்கிகள் சேர்க்கப்பட்டன.
மும்பை,
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்திய ராணுவத்தில் அதி நவீன பீரங்கிகள் சேர்க்கப்பட்டன.
நவீன பீரங்கிகள்
இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக அதி நவீன பீரங்கிகளை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் 145 எம்777 ரக பீரங்கிகளை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதேபோல் இந்தியாவின் லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்திடம் ரூ.4,366 கோடிக்கு கே9 வஜ்ரா என்னும் நவீன ரக பீரங்கியும் வாங்குவதற்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ராணுவத்தில் தற்போதுள்ள பழைய பீரங்கி வாகனங்களை அகற்றும் வகையில் ‘கம்போசிட் கன் டோவிங் வெகிகிள்’ என்னும் நவீன பீரங்கி வாகனமும் தயாரிக்கப்பட்டு உள்ளது.
ராணுவத்தில் சேர்ப்பு
இந்த 3 வித நவீன பீரங்கிகளும் இந்திய ராணுவத்தில் நேற்று முறைப்படி சேர்க்கப்பட்டது.
இதற்கான விழா நாசிக் மாவட்டம் தியோலாலி நகரில் உள்ள பீரங்கிப் படை மையத்தில் நடந்தது. இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு முறைப்படி மூன்று வித பீரங்கிகளையும் ராணுவத்தில் சேர்த்தார். நிகழ்ச்சியில் ராணுவ ராஜாங்க மந்திரி சுபாஷ் பாம்ரே மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் கூறும்போது, ‘‘அடுத்த 2 ஆண்டுகளில் 100 கே9 ரக பீரங்கிகளும், 145 எம்777 ரக பீரங்கிகளும் முழுமையாக நமது ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விடும்’’ என்றார்.
40 கி.மீ. இலக்கு
எம்777 ரக பீரங்கிகள் தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய ராணுவங்களில் பயன்பாட்டில் உள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களிலும் இந்த பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டது.
இலகுவான எடை கொண்ட இந்த ரக பீரங்கிகளை உயரமான இடத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச் சென்று 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி துல்லிய தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story